விருப்பு, வெறுப்பின் காரணமாக எதையும் பேசுவதில்லை - கோலி கருத்துக்கு கவாஸ்கரின் பதில்!

Updated: Sat, May 04 2024 22:43 IST
Image Source: Google

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது வருவதுடன், புது புது சர்ச்சைகளையும் எதிர்கொண்டுவருகிறது. அதில் மிக முக்கியமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்த விவாதமானது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. போதாக்குறைக்கு அவர் டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளதால் அவர், மீது முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் என அனைவரும் முழு கவனத்தை செலுத்தி வருகின்றனர். 

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 500 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்கள் அடங்கும். ஆனாலும்அவரது ஸ்டிரைக் ரேட் குறித்து விமர்சனங்கள் எழுந்த வண்ணமே உள்ளது. ஏனெனில் தொடக்க வீரராக களமிறங்கும் விராட் கோலி 147-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார். ஆனால், தொடக்க வீரர்களாக களமிறங்கும் வெளிநாட்டு வீரர்களை ஒப்பிடுகையில் விராட் கோலி குறைந்த ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி வருவதாக முன்னாள் வீரர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதையடுத்து வீரட் கோலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “நான் எனது ஸ்டிரைக் ரேட் பற்றி கவலைப்படவில்லை. ஏனென்றால் பலரும் எனது ஸ்டிரைக் ரேட் மற்றும் ஸ்பின்னர்களுக்கு எதிரான எனது ஆட்டம் குறித்து அதிகமாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை அணிக்காக வெற்றிபெற்று கொடுப்பதே முக்கியம். அதை தான் கடந்த 15 ஆண்டுகளாக செய்துகொண்டிருக்கிறேன். தங்கள் சொந்தக் கருத்துகளை வெளியே உட்கார்ந்து யார் வேண்டுமானாலும் பேசலாம்” என தனது ஸ்டிரைக் ரேட் குறித்து விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார். 

இந்நிலையில் விராட் கோலியின் இந்த கருத்து குறித்து பேசிய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், “உங்களது ஸ்டிரைக் ரேட் 118 ஆக இருந்தபோதுதான் வர்ணனையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதுகுறித்து எனக்கு உறுதியாக தெரியவில்லை. நான் அதிக போட்டிகளைப் பார்ப்பதில்லை, அதனால் மற்ற வர்ணனையாளர்கள் என்ன சொன்னார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் 14 அல்லது 15 ரன்களில் விக்கெட்டை இழக்கும் போது உங்களது ஸ்டிரைக் ரேட்டானது 118ஆக இருந்தும், அதற்கு நீங்கள் என்னை பாராட்ட வேண்டும் என்று கூறுவது தான் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. 

 

வெளியில் உள்ளவர்கள் பேசுவதை பற்றி கவலை கொள்ளாத நீங்கள், பிறகு ஏன் அவர்களுக்கு பதிலளித்து வருகின்றீர்கள். நாங்கள் உங்கள் அளவிற்கு கிரிக்கெட்டை விளையாடாவில்லாலும், ஏதோ கொஞ்சம் கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். அதனால் உங்களை விமர்சிக்க வேண்டும் என்ற நிரலைக் கொண்டு நாங்கள் எதனையும் பேசுவதில்லை. நாங்கள் எதை பார்க்கிறோமோ அதைப்பற்றிதான் பேசுகிறோம். மாறாக உங்கள் மீதான விருப்பு அல்லது வெறுப்பின் காரணமாக எதனையும் பேசுவதில்லை. களத்தில் என்ன நடக்கிறது என்பதை பெற்றி மட்டும் தான் பேசுகிறோம்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார். 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை