பந்துவீச்சாளர்களுக்கு தேவையான ஸ்கோரை கொடுக்க விரும்பினேன் - ரவீந்திர ஜடேஜா!

Updated: Sun, May 05 2024 23:14 IST
பந்துவீச்சாளர்களுக்கு தேவையான ஸ்கோரை கொடுக்க விரும்பினேன் - ரவீந்திர ஜடேஜா! (Image Source: Google)

 

தரம்சாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இனு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.

இதில் அதிகபட்சமாக ரவீந்திர் ஜடேஜா 43 ரன்களையும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ராகுல் சஹர் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.  இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ரூசோ என இருவரும் துஷார் தேஷ்பாண்டேவின் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்தனர்.

அதன்பின் களமிறங்கிட ஷஷாங் சிங் 27 ரன்களையும்,  பிரப்சிம்ரன் சிங் 30 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் சிஎஸ்கே அணி 28 ரன்களில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் ஜடேஜா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ரவீந்திர ஜடேஜா, “இன்றைய் போட்டி பகல் நேரத்தில் நடைபெற்றதால் பிட்ச் ஸ்லோவாக இருக்கும் என எதிர்பார்த்தோம். மேலும் கொஞ்சம் உஸ்னமாகவும் இருந்ததன் காரணமாக விக்கெட் நாங்கள் நினைத்ததைப் போலவே மெதுவாக இருந்தது.  நாங்கள் இப்போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 30 - 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, பந்துவீச்சாளர்களுக்கு தேவையான ஸ்கோரை கொடுக்க விரும்பினேன். 

இன்றைய போட்டியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். பவர் பிளே ஓவர்களின் போது பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பது போல் இருந்தது. ஆனால் பந்து பழையதாக மாறியதும் எதிபார்த்த வேகத்தில் பேட்டிற்கு வரவில்லை. புதிய மைதானத்தில் நீங்கள் விளையாடும்போது பிட்ச் எப்படி இருக்கும் என்பது உங்களுக்கு தெரியாது. நாங்கள் 15 - 20 ரன்கள் விரைவாக எடுத்ததாக கருதினோம். ஆரம்பத்திலேயே விக்கெட் விழுந்தால் பார்ட்னர்ஷிப் அமைப்பதே என்னுடைய வேலையாக இருந்தது” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை