மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; டிக்கெட் கட்டணத்தை திருப்பி வழங்கும் ஆர்சிபி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், 6 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. இதில் நேற்று நடைபெற இருந்த ரயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் ஒத்திவைக்கப்பட்டதன் காரணமாக, நடப்பு சாம்பியன் கேகேஆர் அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பிலிருந்து வெளியேறியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டி மழையால் முழுமையாக கைவிடப்பட்டதை அடுத்து ரசிகர்களின் போட்டிக்கான டிக்கெட் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆர்சிபி அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மே 17அன்று ஆர்சிபி மற்றும் கேகேஆர் இடையேயான ஆட்டம் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டதால், அனைத்து செல்லுபடியாகும் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கும் முழு பணத்தைத் திரும்பப் பெற தகுதியுடையவர்கள்.
இதில் டிஜிட்டல் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யப் பயன்படுத்திய அசல் கணக்கிற்கு 10 வேலை நாட்களுக்குள் பணம் திரும்பப் பெறப்படும். மே 31 க்குள் உங்களுக்கு பணம் திரும்பப் பெறப்படவில்லை என்றால், தயவுசெய்து முன்பதிவு விவரங்களுடன் refund@ticketgenie.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அதேசமயம் மைதானத்தில் டிக்கெட்டுகளை வாங்கிவர்கள் உரிய இடத்தில் வழங்கி பணத்தை திரும்ப பெறலாம்” என்று அறிவித்துள்ளது.
Also Read: LIVE Cricket Score
முன்னதாக, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் காரணமாக ஐபிஎல் 2025 ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டன. இதனால் மே 13 மற்றும் மே 17 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளையும் திரும்பப் பெறுவதாக ஆர்சிபி நிர்வாகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.