ஐபிஎல் 2022: ஏலத்தின் போது பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாப் 10 வீரர்கள்!
ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பங்கேற்கவுள்ள ஒட்டுமொத்த வீரர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி 590 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றன. பழைய அணிகளால் வேண்டாம் என கழட்டிவிடப்பட்டு, அசத்தல் கம்பேக் கொடுத்த டாப் 10 வீரர்களை ஐபிஎல் நிர்வாகமே வரிசைப்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் முன்னணி ஓப்பனிங் வீரர்களாக வலம் வந்த ஷிகர் தவான் ( டெல்லி கேப்பிடல்ஸ்) ஃபஃப் டூ பிளெசிஸ் (சிஎஸ்கே ) குயிண்டன் டி காக் ( மும்பை இந்தியன்ஸ் ) ஆகியோர் வயதாகிவிட்டது, எதிர்காலத்திற்கு தேவை இல்லை என்பது போல கழட்டிவிட்டப்பட்டனர்.
ஆனால் ஷிகர் தவான் மற்றும் டிகாக் ஆகியோர் இந்தியா - தென் ஆப்பிரிக்கா தொடரில் வரிசையாக அரைசதம் அடித்து தங்களது பதிலடியை கொடுத்தனர். இதே போல டூ பிளெசிஸும் உள்நாட்டு தொடர்களில் சதமடித்து அசத்தியுள்ளார்.
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இருந்து டேவிட் வார்னரும், டெல்லி அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயரும் கேப்டன்சி பிரச்சினை காரணமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி காட்டி நல்ல ஃபார்மில் உள்ளனர். இந்த 2 வீரர்களுமே மீண்டும் ஏதேனும் ஐபிஎல் அணிகளுக்கு கேப்டன் ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கென்றே பெரும் தொகைகள் குவியவிருக்கின்றன.
இனி டி20 போட்டிகளில் எல்லாம் இவர் தேறமாட்டார் என டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் கழட்டிவிடப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச டி20 போட்டிகளில் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். இந்திய களங்களில் அவரின் பவுலிங் இன்னும் பலமாக இருக்கும் என்பதால் புதிதாக வந்துள்ள 2 அணிகளும் அஸ்வினை ஏலம் எடுக்க குறிவைத்துள்ளன.
அஸ்வினை போலவே பேட் கம்மின்ஸும் அனைத்து அணிகளாலும் தேடப்படும் ஆல்ரவுண்டராக இருக்கிறார். கடந்த சீசனிலேயே கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்படவிருந்த அவர், திடீரென தொடரில் இருந்து வெளியேறியதால் மெகா ஏலத்திலும் கழட்டிவிடப்பட்டார். ஆனால் அவரின் மதிப்பை சர்வதேச போட்டிகளில் நிரூபித்திருப்பதால், மற்ற அணிகள் ஆர்வமாக உள்ளன.
உலகின் தலைசிறந்த பவுலர்களின் பட்டியலில் இருப்பவர்கள் முகமது ஷமி, ட்ரெண்ட் போல்ட், காகிசோ ரபாடா. டெத் ஓவர்களில் மிகச்சிறப்பாக வீசக்கூடிய இவர்களை வேறு வழியின்றி அணிகள் கழட்டிவிட்டன. எனினும் பழைய அணிகளே மீண்டும் இவர்களை ஏலத்தில் எடுக்க ஆர்வமாக உள்ளன.
டாப் 10 வீரர்கள்:
டேவிட் வார்னர், ஷிகர் தவான், குயிண்டன் டிகாக், டூப்ளசிஸ், ஸ்ரேயாஸ் ஐயர், ரவிச்சந்திரன் அஸ்வின், பேட் கம்மின்ஸ், ரபாடா, ட்ரெண்ட் போல்ட், முகமது ஷமி