ஐபிஎல் 2022: குறைந்த டிஆர்பி; சிக்கலில் பிசிசிஐ!
நடப்பு சீசன் கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கியது. பல ஆண்டுகளுக்கு பிறகு 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றன. இந்த சீசனை வழக்கம் போல் ஸ்டார் நிறுவனம் ஒளிபரப்பியது.
இந்த சீசனில் விளம்பரங்கள் மூலம் மட்டும் 5 ஆயிரம் கோடியை ஸ்டார் நிறுவனம் வசூல் செய்தது. இதனால் அடுத்த 5 ஆண்டுக்கான தொலைக்காட்சி ஒப்பந்தம் பெரும் அளவில் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது.
தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டிங்கை கண்காணிக்கும் பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள முடிவில், மார்ச் 26ஆம் தோதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை ரேட்டிங் 2.75 என்ற அளவில் தான் பதிவாகியுள்ளது. இதுவே கடந்த சீசனின் முதல் வாரத்தில் இது 3.75 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் 33 சதவீதம் அளவுக்கு ரேட்டிங் குறைந்துள்ளது.
ரேட்டிங் மட்டுமல்லாமல் பார்வையாளர்கள் எண்ணிக்கை அளவும் கணிசமாக குறைந்துள்ளது. நடப்பு சீசனின் முதல் வாரத்தில் 22 கோடி பேர் பார்த்துள்ளனர். ஆனால் கடந்த சீசனின் முதல் வாரத்தில் 26 கோடி பேர் ஐபிஎல் போட்டிகளை தொலைக்காட்சி மூலம் பார்த்துள்ளனர். கிட்டதட்ட 14 சதவீதம் பார்வையாளர்கள் ஐபிஎல் போட்டிகளை பார்க்கவில்லை.
இது ஸ்டார் நிறுவனத்துக்கும், பிசிசிஐக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது, கடந்த 5 ஆண்டுக்கான ஒளிபரப்புக்கான உரிமை 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவு என இருந்தது. இதனை 40 ஆயிரம் கோடியாக உயர்த்த பிசிசிஐ முடிவு எடுத்தது. தற்போது டிஆர்பி ரேட்டிங் குறைந்துள்ளதால் பிசிசிஐ நினைத்தப்படி அவ்வளவு பணம் வராது என தெரியவந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள சிஎஸ்கே மற்றும் மும்பை அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவியதே பார்வையாளர்களின் குறைவுக்கு காரணம் என தெரிகிறது. மேலும் பனிப்பொழிவு காரணமாக டாஸ் வெல்லும் அணி தான் போட்டியை வெல்வதால், பார்வையாளர்களிடையே ஐபிஎல் போட்டிகளுக்கான சுவாரஸ்யம் குறைத்துள்ளது. மேலும் தோனி கேப்டன் பதவியை விட்டு விலகியதும், இதற்கு ஒரு காரணமாகஇருக்கலாம் என அஞ்சப்படுகிறது.