ஐபிஎல் 2022: விதிகளை மீறியதாக ரிஷப், ஷர்துலுக்கு கடும் அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்!

Updated: Sat, Apr 23 2022 13:38 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற 34ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி அதிரடியாக விளையாடி 222 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பட்லர் 116 ரன்கள் எடுத்து அசத்தினார். 

இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு இறுதி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த ரோவ்மேன் பவல் முதல் மூன்று பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார்.

ஆனால் அடுத்தடுத்த பந்துகளில் ஓரிரு ரன்கள் மட்டுமே அடித்து விக்கெட்டை இழந்தார். இறுதியாக டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் அடித்த நிலையில் 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதனிடையே, இறுதி ஓவரில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதாவது, 20ஆவது ஓவரில் ராஜஸ்தான் பந்துவீச்சாளர் மெக்காய் வீசிய மூன்றாவது பந்து பேட்டர் ரோவ்மேன் பவல் இடுப்பு உயரம் வீசப்பட்டு, கள நடுவர் நோ பால் கொடுக்காததால் மைதானத்தில் பெரும் சலசலப்பு நிலவியது. 

அந்த பந்தை நடுவர் நோ பால் கொடுக்காததால், மைதானத்துக்கு வெளியே இருந்த டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் விரக்தி அடைந்து காலத்தில் இருந்த பேட்டர்களை களத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தியது, சலசலப்பை உண்டாக்கி தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.

பந்த்தின் இந்த செயலுக்கு மூத்த கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் நேற்று நோ பால் சர்ச்சையின்போது நடுவர்களுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். இந்த நிலையில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடுவர் தீர்ப்பை மீறிய டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்துக்கு 100 விழுக்காடு அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம். 

நோ பால் கொடுக்காததால் தனது அணி வீரர்களை பெவிலியன் திரும்புமாறு கூறியதால் பந்துக்கு அபராதம் விதிக்கப்ட்டுள்ளது. மேலும், மைதானத்துக்குள் சென்று நடுவருடன் வாக்குவாதம் செய்த டெல்லி அணியின் துணை பயிற்சியாளர் பிரவீனுக்கும் 100 விழுக்காடு அபராதம் விதிக்கப்படுவதாகவும், ஐபிஎல் போட்டி நடத்தை விதிகளை மீறிய புகாரில் டெல்லி வீரர் ஷர்துல் தாகூருக்கு 50 விழுக்காடு அபராதம் விதிகப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை