IRE vs AFG, 2nd T20I: ஆஃப்கானை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி!
அயர்லாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று பெல்ஃபெஸ்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் நிக்கும் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ், உஸ்மான் கானி ஆகியோர் தலா ஒரு ரன்னுடன் வெளியேறி ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி - இப்ராஹிம் ஸத்ரான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் ஸத்ரான் 17 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹஸ்மதுல்லா ஷாஹிதியும் 36 ரன்கள் எடுத்த நிலையில் கரெத் டெலானி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் அயர்லாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை மட்டுமே சேர்த்தது. அயர்லாந்து தரப்பில் ஜோஷுவா லிட்டில், மார்க் அதிர், குர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங் 4 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் பால்பிரினி - லோர்கன் டக்கர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் டக்கர் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹேரி டெக்டரும் 7 ரன்களோடு நடையைக் கட்டினார். அதன்பின் மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பால்பிர்னியும் 46 ரன்கள் எடுத்த நிலையில் முஜீப் உர் ரஹ்மானிடம் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் அயர்லாந்து கிரிக்கெட் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அயர்லாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.