IRE vs AFG, 5th T20I: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை வென்றது அயர்லாந்து!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆஃப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் 4 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை சமன்செய்தன.
இந்நிலையில், தொடரில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி பெல்ஃபெஸ்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 15 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கனி 44 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அதிர் 3 விக்கெட்டுகளையும், ஜோஷுவா லிட்டில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
மழை தொடர்ந்து பெய்ததால், ட்க்வொர்த் லூயிஸ் முறைப்படி 7 ஓவர்களில் 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என அயர்லாந்து அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணியில் கேப்டன் பால்பிர்னி 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பால் ஸ்டிர்லிங்கும் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய லோர்கன் டக்கர் 14 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஹேரி டெக்டர் - ஜார்ஜ் டக்ரேல் இணை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இதன்மூலம் அயர்லாந்து அணி 6.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் டி20 தொடரை 3-2 என கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் விருது மார்க் அதிருக்கும், தொடர் நாயகன் விருது ஜார்ஜ் டாக்ரெலுக்கும் வழங்கப்பட்டது. மேலும் இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து அணி முதல் முறையாக ஆஃப்கானை வீழ்த்தி தொடரை வென்றதுள்ளது குறிப்பிடத்தக்கது.