IRE vs IND, 1st T20I: ஹூடா, இஷான் கிஷான் அதிரடி; அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!
இந்தியா - அயா்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 ஆட்டம் டப்ளினில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹாா்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இருப்பினும் தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பால் ஸ்ட்ரிலீங் மற்றும் ஆண்ட்ரியூ பால்ஃப்ரின் ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சில் திணறி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இருப்பினும், ஹாரி டெக்டரின் அதிரடி ஆட்டதால் அயர்லாந்து அணி 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்களை எடுத்தது. டெக்டர் 64 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய அணிக்கு இஷான் கிஷான் - தீபக் ஹூட இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இஷான் கிஷான் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா - ஹர்திக் பாண்டியா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதன்பின் 24 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தீபக் ஹூடா 47 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இதன்மூலம் இந்திய அணி 9.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தில் அபார வெற்றியைப் பெற்றது.