IRE vs SA, 1st ODI: மழை காரணமாக பாதியிலேயே முதல் ஒருநாள் போட்டி ரத்து!
தென் ஆப்பிரிக்க அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கெதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று டப்லினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியில் நட்சத்திர வீரர் பால் ஸ்டிர்லிங் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த வில்லியம் போர்ட்டர்ஃபீல் - ஆண்டி பால்பிர்னி இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது.
இதில் இருவரும் அரைசதம் அடித்தும் அசத்தினர். பின்னர் 63 ரன்கள் எடுத்திருந்த போர்ட்டர்ஃபீல்ட் ஷம்ஸி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஆண்டி பால்பிர்னியும் 65 ரன்களில் ரபாடாவிடம் விக்கெட்டை இழந்தார்.
பின் அயர்லாந்து அணி 40. 2 ஓவர்களுக்கு 195 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை நீடித்த காரணத்தினால் தென் ஆப்பிரிக்க - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ரத்து செய்யப்படுவதாக களநடுவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை 13ஆம் தேதி டப்லினில் தொடங்கவுள்ளது.