IRE vs SA, 2nd T20I: பார்னெல் பந்துவீச்சில் வீழ்ந்தது அயர்லாந்து!
தென் ஆப்பிரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று பிரிஸ்டோலில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டிக் காக், வெண்டர் டூசேன் ஆகியோர் சொதப்பினாலும், ரீஸா ஹெண்ட்ரிஸ் 42 ரன்களைச் சேர்த்தார்.
அவர்களைத் தொடந்து மார்க்ரம் 27, ஹெண்ட்ரிச் கிளாசென் 39, கேப்டன் மில்லர் 34, பிரிட்டோரியஸ் 17 என ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியில் ஆண்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர் ஆகியோர் அடுத்தடுத்து ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பால் ஸ்டிர்லிங் 28 ரன்னிலும், ஹேரி டெக்டர் 34 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். இறுதியில் பேரி மெக்கர்தில் 32 ரன்களைச் சேர்த்தார்.
இதனால் 18.5 ஓவர்களில் அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வெய்ன் பார்னெல் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.