அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று தொடங்கியது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Advertisement

இதையடுத்து அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியானது நேற்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பவுமார் - ரியான் ரிக்கெல்டன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

Advertisement

அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரியான் ரிக்கெல்டன் 40 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரர் டெம்பா பவுமா 35 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் இணைந்த ரஸ்ஸி வேண்டர் டுசென் மற்றும் கைல் வெர்ரைன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் வேண்டர் டுசென் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கைல் வெர்ரைன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

மேலும் அவருடன் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் 65 ரன்களைச் சேர்த்திருந்த கைல் வெர்ரைன் தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வியான் முல்டரும் பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். மேலும் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வியான் முல்டர் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 110 ரன்களைக் குவித்திருந்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 343 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் கிரேய்க் யங், கர்டிஸ் காம்பேர், ஆண்டி மெக்பிரைன், கவின் ஹோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்படி அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஆண்ட்ரூ பால்பிர்னி ஒரு ரன்னிலும், கேப்டன் பால் ஸ்டிர்லிங் 5 ரன்களிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து களமிறங்கிய கர்டிஸ் காம்பெர் 17 ரன்களிலும், ஹேரி டெக்டர் 20 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஸ்டீஃபன் தொஹனி ரன்கள் ஏதுமின்றியும், ஜார்ஜ் டக்ரேல் 11 ரன்களுக்கும், மார்க் அடைர் 21 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் அயர்லாந்து அணியின் தோல்வியும் உறுதியானது. பின்னர் களமிறங்கிய வீரர்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிரெய்க் யங் 29 ரன்களையும், கெவின் ஹோய் 23 ரன்களைச் சேர்த்தனர். 

Advertisement

அதேசமயம் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அயர்லாந்து அணி 30.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லிசாத் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி மற்றும் ஃபோர்டூன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News