IRE vs SA, 3rd ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து ஆறுதல் வெற்றி!
அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவிலும் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் அயர்லாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர்.
இதில் அபாரமாக விளையாடி வந்த கேப்டன் பால் ஸ்டிர்லிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன் மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களை கடந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரூ பால்பிர்னி 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 45 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஸ்டிர்லிங்குடன் இணைந்த கர்டிஸ் காம்பெரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அயர்லாந்து அணி மிகப்பெரிய ஸ்கோரை நோக்கி நகர்ந்தது. அப்போது 34 ரன்களை எடுத்த நிலையில் கர்டிஸ் காம்பெர் ஆட்டமிழந்தர்.
அதேசமயம் மறுபக்கம் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பால் ஸ்டிர்லிங் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 88 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் இணைந்த ஹாரி டெக்டர் மற்றும் லோர்கன் டக்கர் இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் லோர்கன் டக்கர் 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜார்ஜ் டக்ரேல் 6 ரன்களுக்கும், மார்க் அதிர் 8 ரன்களுக்கும், ஃபின் ஹாண்ட் ரன்கள் ஏதுமின்றியும், கிரஹாம் ஹூம் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இருப்பினும் மாறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி டெக்டர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 60 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணியானது 9 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லிசாத் வில்லியம்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை.
அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ரியான் ரிக்கெல்டன் 4 ரன்களிலும், ரீஸா ஹென்றிக்ஸ் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரஸ்ஸி வெண்டர் டுசெனும் 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் ஜோடி சேர்ந்த கைல் வெர்ரைன் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 20 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கைல் வெர்ரைன் 38 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய ஜேசன் ஸ்மித் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய வீரர்களில் ஆண்டில் பெஹ்லுக்வாயோ 23 ரன்களுக்கும், ஃபோர்டுன் 11 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். பின்னர் அரைசதம் கடந்து விளையாடி வந்த ஜேசன் ஸ்மித்தும் 91 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் தென் ஆப்பிரிக்க அணியானது 46.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன், 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய கிரஹாம் ஹூம், கிரெய்க் யங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் அயர்லாந்து அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பால் ஸ்டிர்லிங் ஆட்டநாயகன் விருதையும், தொடர் முழுவதும் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய லிஸாத் வில்லியம்ஸ் தொடர் நாயகன் விருதை வென்றார்.