IRE vs SA: கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து டெம்பா பவுமா விலகல்; ஹென்றிஸுக்கு வாய்ப்பு!

Updated: Sun, Oct 06 2024 20:31 IST
Image Source: Google

அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவிலும் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

இதையடுத்து அயர்லாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஒருநாள் தொடரை வென்று அசத்திய தென் ஆப்பிரிக்க அணியானது இப்போட்டியிலும் வெற்றிபெற்று, அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் விளையாடவுள்ளது. 

அதேசமயம் ஒருநாள் தொடரை இழந்துள்ள அயர்லாந்து அணியும் இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முனைப்பில் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. 

அந்தவகையில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் ஆல் ரவுண்டர் வியான் முல்டர் ஆகியோர் காயம் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது காயமடைந்து, களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. 

பரிசோதனையின் முடிவில் அவரது காயம் தீவிரமடைந்ததை அடுத்து இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கான மாற்று வீரராக ரீஸா ஹென்றிக்ஸை தேர்வுசெய்துள்ளதாகவும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேற்கொண்டு நாளைய போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக ரஸ்ஸி வேண்டர் டூசென் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

தென் ஆப்பிரிக்க அணி: ரியான் ரிக்கெல்டன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென்(கே), கைல் வெர்ரைன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அண்டில் பெஹ்லுக்வாயோ, பிஜோர்ன் ஃபோர்டுயின், லிசாட் வில்லியம்ஸ், லுங்கி இங்கிடி, ஒட்னீல் பார்ட்மேன், நகாபா பீட்டர், டோனி டி ஸோர்ஸி, ஜேசன் ஸ்மித்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை