பால்பிர்னி அசத்தல் சதம்; தென் ஆப்பிரிக்காவை பதம் பார்த்தது அயர்லாந்து!
அயர்லாந்து - தென் ஆப்பிர்க்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று டப்லினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு ஆண்டி பால்பிர்னி - ஹேரி டெக்டர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஆண்டி பால்பிர்னி 102 ரன்களையும், ஹேரி டெக்டர் 79 ரன்களையும் எடுத்திருந்தனர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு மாலன் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்தார். ஆனால் மார்க்ரம், பவுமா, வெர்ரெயின், மில்லர் என அடுத்தடுத்து நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
பின் 84 ரன்களைச் சேர்த்திருந்த மாலனும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப பின்னர் வந்த வீரர்கள் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
இதனால் 48.3 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 247 ரன்களை மட்டுமே எடுத்தது. அயர்லாந்து அணி தரப்பில் ஜோஷுவா லிட்டில், மார்க் ஆதிர், ஆண்டி மெக்பிரையன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன் மூலம் அயர்லாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி, ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.