கடைசி சில ஓவர்களில்தான் நாங்கள் அவர்களிடம் ஆட்டத்தை இழந்து விட்டோம் - பால் ஸ்டிர்லிங்!
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் ஏற்கனவே முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது நேற்றைய இரண்டாவது போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 33 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
அதன்படி நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற இந்த இரண்டாவது டி20 போட்டியில் டாசில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணியானது முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது பேட்ஸ்மேன்களின் அற்புதமான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களையும், சஞ்சு சாம்சன் 40 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய அயர்லாந்து அணியானது 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியானது இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தோற்று தொடரை இழந்த பின்பு பேசிய அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங், “எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. நாங்கள் அவற்றை சரியாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆட்டத்தில் 40 ஓவர்களிலும் எங்களுக்கு நேர்மறையான விஷயங்கள் இருந்தன. கடைசி சில ஓவர்களில்தான் நாங்கள் அவர்களிடம் ஆட்டத்தை இழந்து விட்டோம். அவர்களுடைய பேட்ஸ்மேன் அட்டாக் செய்ய சென்ற பொழுது எங்களால் பந்து வீச முடியவில்லை. எங்களிடம் சரி செய்ய வேண்டிய பக்கங்கள் இருக்கிறது. அதை சரி செய்து திரும்பி வந்து மூன்றாவது போட்டியில் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்தார்.