IREvs NED, 1st ODI: அயர்லாந்தை ஒரு ரன்னில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற நெதர்லாந்து!
அயர்லாந்து அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
நெதர்லாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் 8ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய டிம் வாண்டெர் கக்டென் அதிகபட்சமாக 49 ரன்கள் அடித்தார்.
அவரைத்தவிர மற்ற அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 50 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி வெறும் 195 ரன்கள் மட்டுமே அடித்தது. அயர்லாந்து அணி சார்பில் கிரேக் யங்,லிட்டில் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 196 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி, ஒருமுனையில் விக்கெட்டுகளை இழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று சிறப்பாக ஆடிய அனுபவ தொடக்க வீரர் பால் ஸ்டிர்லிங் அரைசதம் அடித்தார். 69 ரன்களை குவித்து ஸ்டிர்லிங் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த மற்ற வீரர்களும் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 194 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நெதர்லாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது. இதன்மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என நெதர்லாந்து முன்னிலை வகிக்கிறது.