IREW vs NEDW : ஆறுதல் வெற்றியைப் பெற்ற நெதர்லாந்து!
அயர்லாந்து மகளிர் - நெதர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. ஏற்கெனவே இத்தொடரில் நடைபெற்ற 3 போட்டிகளில் அயர்லாந்து அணி 2 போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டத்தால் ஆட்டம் தடைப்பட்டது. இதில் அதிகபட்சமாக ஸ்டோகெல் 48 ரன்களையும், டென்லி 39 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் டக்வெர்த் லூயிஸ் முறைப்படி நெதர்லாந்து அணிக்கு 15 ஓவர்களில் 118 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது
அதன்பின் அதிரடியாக விளையாடிய பாபெட் டி லீடே அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் நெதர்லாந்து மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது.
மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த பாபெட் டி லீடே ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.