ஆஃப்கான் வெற்றியை ரஷித் கானுடன் நடனமாடி கொண்டாடிய இர்ஃபான் பதான்!

Updated: Tue, Oct 24 2023 11:56 IST
Image Source: Google

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற லீக் போட்டியில் வலுவான பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் பாபர் அசாம் 74, அப்துல்லா ஷஃபிக் 58 ரன்கள் எடுத்த உதவியுடன் 283 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஆஃப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நூர் அஹ்மது 3 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். அதைத் துரத்திய ஆஃப்கானிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி பவர்பிளே ஓவர்களை பயன்படுத்தி 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஓப்பனிங் ஜோடியில் ரஹமனுல்லா குர்பாஸ் 65, இப்ராஹிம் ஸத்ரான் 87 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.

அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் ரஹ்மத் ஷா 77 ரன்களும் கேப்டன் ஷாஹிதி 48 ரன்களும் எடுத்து 49 ஓவரில் ஆஃப்கானிஸ்தானை வெற்றி பெற வைத்தனர். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 7 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து ஆஃப்கானிஸ்தான் சரித்திர சாதனை வெற்றி பெற்றது. மறுபுறம் ஷாஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி தலா 1 விக்கெட் எடுத்தும் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது.

மேலும் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக 275+ ரன்கள் கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது. மறுபுறம் இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பையில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற இந்தியாவின் சாதனையை தகர்த்த ஆஃப்கானிஸ்தான் புதிய சாதனை படைத்தது. அந்த சரித்திர வெற்றியை ரஷித் கான் உள்ளிட்ட ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் தங்கள் நாட்டு கொடியுடன் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி வலம் வந்து ரசிகர்களுடன் கொண்டாடினார்கள்.

அந்த சமயத்தில் ஒரு இடத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் இப்போட்டியை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆஃப்கானிஸ்தான் அணியினர் வருவதை பார்த்த அவர் பேட்டியை பாதியிலேயே நிறுத்திவிட்டு ரஷித் கானுடன் சேர்ந்து கையை தூக்கி நடனமாடி கட்டிப்பிடித்து பாகிஸ்தானின் தோல்வியை கொண்டாடினார்.

 

அத்துடன் “ரஷித் கான் அவருடைய சத்தியத்தை முழுமை செய்து விட்டார். நான் என்னுடைய சத்தியத்தை முழுமை செய்து விட்டேன். சிறப்பாக விளையாடினார்கள் வீரர்களே” என்று ட்விட்டரில் அந்த நடனமாடிய புகைப்படத்தை பதிவிட்டு இர்ஃபான் பத்தான் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது பொதுவாகவே பாகிஸ்தான் ரசிகர்கள் ட்விட்டரில் அடிக்கடி வம்பிழுப்பதும் அதற்கு அவர் பதிலடி கொடுப்பது வழக்கமாகும். இந்நிலையில் இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை