அஸ்வின் அடுத்த போட்டியில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் - விவிஎஸ் லக்ஷ்மன்

Updated: Mon, Aug 09 2021 22:07 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் மழையால் டிராவில் முடிந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 183 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் அடித்தது.

95 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 303 ரன்கள் அடிக்க, இதையடுத்து 209 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி, 4ஆம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் அடித்திருக்க, கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு வெறும் 157 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்திய அணி எளிதாக ஜெயித்திருக்க வேண்டிய இந்த போட்டியை மழை கெடுத்தது. கடைசி நாளான நேற்றைய ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டி டிரா என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 2ஆவது போட்டி வரும் 12ஆம் தேதி லண்டன் லார்ட்ஸில் தொடங்குகிறது. இப்போட்டிக்கான இந்திய அணியில் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்பது பெரும் வலியுறுத்தல்களாக உள்ளன.

முதல் டெஸ்ட் போட்டியிலேயே அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக அஸ்வினை எடுக்காமல் பேட்டிங்கை கருத்தில்கொண்டு ஜடேஜா எடுக்கப்பட்டது பெரும் விவாதத்துக்கும், விமர்சனத்துக்கும் உள்ளானது. இந்நிலையில், லார்ட்ஸில் நடக்கவுள்ள 2ஆவது டெஸ்ட்டில் ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வினை எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்திவருகின்றனர்.

அந்தவகையில், அஸ்வின் குறித்து பேசியுள்ள விவிஎஸ் லக்ஷ்மண், “அஸ்வின் கண்டிப்பாக ஆடும் லெவனில் சேர்க்கப்பட வேண்டும். அஸ்வினை சேர்ப்பது, இந்திய அணியின் பவுலிங் யூனிட்டுக்கு வலு சேர்க்கும். வித்தியாசமான பவுலிங் ஆப்சன்களை கேப்டனுக்கு கொடுக்கும். 

எந்தவிதமான கண்டிஷனிலும் அஸ்வின் அருமையாக பந்துவீசக்கூடியவர். மேட்ச் வின்னிங் பெர்ஃபாமன்ஸை கொடுக்கக்கூடிய அஸ்வின், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கண்டிப்பாக பெரிய பிரச்னையாக திகழ்வார். எனவே அடுத்த டெஸ்ட் போட்டியில் அஸ்வினை கண்டிப்பாக ஆடும் லெவனில் சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை