டி20-ல் ஒன் டே கிரிக்கெட்டை விளையாடுகிறாரா வில்லியம்சன்?
எதிர்பாரா திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் கேன் வில்லியம்சன் தலைமையான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதல் வாரத்தில் அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடியது. இருப்பினும் அதன்பின் கொதித்தெழுந்த அந்த அணி அடுத்த 5 போட்டிகளில் வரிசையாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களுக்குள் நுழைந்தது. அந்த நிலையில் நேற்று நடைபெற்ற தனது 9ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை எதிர்கொண்ட அந்த அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.
அதனால் 5 தொடர் வெற்றிகளுக்கு பின் 3ஆவது தோல்வியை பதிவு செய்தாலும் புள்ளி பட்டியலில் தொடர்ந்து 4ஆவது இடத்தில் நீடிக்கிறது. புனே நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று பந்து வீசுவதாக அறிவித்த ஹைதராபாத்தை ஓபனிங் வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே முதல் ஓவரிலிருந்தே ஜோடி போட்டு அதிரடி சரவெடியாக பவுண்டரிகளை பறக்கவிட்டனர்.
இதன்மூலம் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 202/2 ரன்களை சென்னை எடுத்தது. அதை தொடர்ந்து 203 என்ற பெரிய இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அந்த நிலையில் 39 (24) ரன்கள் எடுத்து அபிஷேக் சர்மா ஆட்டமிழக்க அடுத்து வந்த ராகுல் திரிப்பாதி கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்த ஒருசில ஓவர்களில் ஐடன் மார்க்ரம் 17 (10) ரன்களில் அவுட்டானபோது கேன் வில்லியம்சனும் 47 (37) ரன்களில் அவுட்டாகி பின்னடைவைச் கொடுத்தார்.
இதனால் 20 ஓவர்களில் 189/6 ரன்களை மட்டுமே எடுத்த ஹைதராபாத் போராடி தோற்றது. சென்னை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகேஷ் சௌத்ரி 4 விக்கெட்டுகள் எடுத்தார். இந்நிலையில் இந்த போட்டியில் ஹைதராபாத் தோல்விக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் மெதுவாக விளையாடியதே காரணம் என்று நிறைய ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
ஏனெனில் 203 என்ற நிலையில் ஓவருக்கு 10 ரன்கள் வேண்டுமென்ற சூழ்நிலையில் 37 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 பவுண்டரி 2 சிக்சர் அடித்தாலும் 47 ரன்களை 127.03 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் மட்டுமே எடுத்தார். ஆனால் இதுபோன்ற ஸ்ட்ரைக் ரேட் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும் என்று ரசிகர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
சரி இந்த ஒரு போட்டியில் தான் அப்படி என்று பார்த்தால் இந்தத் தொடர் முழுவதுமே இதேபோல் ஒன்று ஒன்டே இன்னிங்ஸ் அல்லது டெஸ்ட் இன்னிங்ஸ் போல மெதுவாக அல்லது ரொம்பவும் மெதுவாக கேன் வில்லியம்சன் டேட்டிங் செய்வதாக நிறைய ரசிகர்கள் அலுத்துக்கொள்கின்றனர். ஏனெனில் இந்த வருடம் இதுவரை 2 (7), 16 (16), 32 (40), 57 (46), 17 (16), 3 (9), 16 (17), 5 (8), 47 (37) என எந்த ஒரு போட்டியிலும் டி20 இன்னிங்ஸ் போல அதிரடியாக ஆடாத அவர் சுமாரான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் மட்டுமே விளையாடி வருகிறார். குறிப்பாக நேற்றைய போட்டியை போல பெரிய ரன்களை துரத்தும் போது அவரின் ஸ்ட்ரைக் ரேட் ஒன்டே இன்னிங்ஸ் போல மோசமாக உள்ளது.
எனவே டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் அவரை பாராட்டுவதற்காக அதே ஆட்டத்தை டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடுவது எந்த வகையிலும் அணியின் வெற்றிக்கு பயனளிக்காது என்று நட்சத்திர வீரராக கருதப்படும் கேன் வில்லியம்சன் மீது ரசிகர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.