எதிரணி யார் என்பது பெரிதல்ல - சாதனைக்கு பின் ஜெகதீசன்!
இந்தியாவில் தற்போது விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
அந்த வகையில் இன்றைய லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு - அருணாச்சலபிரதேச அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் ஜெகதீசன் , சாய் சுதர்ஷன் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
சாய் சுதர்ஷன் 154 ரன்கள் குவித்தார். அதேவேளை மற்றொரு புறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெகதீசன் 141 பந்துகளில் 277 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். முதல் தர வரிசை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை ஜெகதீசன் படைத்தார். இறுதியில் தமிழ்நாடு அணி 50 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 506 ரன்கள் குவித்தது.
அதன்பின் மெகா இலக்கை துரத்திக் களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணியில் ஒருவர்கூட 20 ரன்களை தொடவில்லை. குறிப்பாக, மூன்று பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்களை அடித்தனர். இதனால், அருணாச்சல பிரதசே அணி 71/10 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 435 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.தமிழ்நாடு அணி தரப்பில் மணிமாறன் சித்தார்த் 5/12 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இந்த வெற்றிக்கு பின் 277 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த ஜெகதீசன் அளித்த பேட்டியில், “நான் சிறப்பாக உணருகிறேன். இந்த போட்டி மட்டுமல்ல மற்ற போட்டிகளிலும் 50 ஓவர்கள் வரை விளையாடுவது தான் எனது நோக்கம். எதிரணி யார் என்பது பெரிதல்ல. எனக்கு ஒரே ஒரு செயல்பாடுதான் உள்ளது. அது என்னவென்றால் களத்தில் இருப்பது தான்” என்று தெரிவித்தார்.