IND vs SL: டிக்ளர் செய்தது குறித்து மனம் திறந்த ஜடேஜா!

Updated: Sun, Mar 06 2022 12:37 IST
Image Source: Google

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் கடந்த 4ஆம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. ரோஹித்தின் கேப்டன்சியில் இந்திய அணி ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி வீரர்கள் அனைவருமே நன்றாக பேட்டிங் ஆடினார்கள். குறிப்பாக ஜடேஜா மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடினார்கள். ஜடேஜா அபாரமாக விளையாடி சதமடித்ததுடன் 175 ரன்களை குவித்தார்.

இதனால் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் அடித்திருந்த நிலையில், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. ஜடேஜா இரட்டை சதமடிப்பதற்கான வாய்ப்பிருந்தும் கூட, அவர் 175 ரன்களில் களத்தில் இருந்தபோது, கேப்டன் ரோஹித் சர்மா முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார். 2ஆம் நாள் ஆட்டத்தின் 2வது செசன் முடிவதற்கு சற்று முன்பாக டிக்ளேர் செய்தார் ரோஹித்.

ஜடேஜாவை இரட்டை சதமடிக்க விடாமல் ரோஹித் சர்மா டிக்ளேர் செய்ததாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ரோஹித்தை சாடிவருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் டிக்ளேர் திட்டம் குறித்து பேசிய ரவீந்திர ஜடேஜா, “எனக்கு ஓய்வறையிலிருந்து செய்தி அனுப்பப்பட்டது. நானும் ஆடுகளத்தின் தன்மை குறித்து ஓய்வறைக்கு செய்தி அனுப்பினேன். பந்து திரும்ப தொடங்கிவிட்டது, பவுன்ஸும் வித்தியாசமாக இருக்கிறது. ஆடுகளத்தின் தன்மை மாற தொடங்கிவிட்டது. 

மேலும் இலங்கை வீரர்கள் ஒன்றரை நாள் ஃபீல்டிங் செய்து சோர்ந்து போயிருப்பதால், இப்போது டிக்ளேர் செய்வது சரியாக இருக்கும். அவர்களாக பெரிய ஷாட்டுகளை ஆடமுடியாது. பிட்ச்சும் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது. எனவே டிக்ளேர் செய்ய இதுதான் சரியான நேரம் என ஓய்வறைக்கு செய்தி அனுப்பினேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை