ஐபிஎல் தொடரின் அனுபவம் எனக்கு உதவியது - வாண்டர் டூசென்!

Updated: Fri, Jun 10 2022 14:29 IST
Image Source: Google

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 76 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 36 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய பாண்டியா 12 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான பவுமா 10 ரன்களிலும், டி காக் 22 ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர். இதன்பின் களமிறக்கப்பட்ட டூவைன் ப்ரெடோரியஸ் 13 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இதன்பின் கூட்டணி சேர்ந்த டேவிட் மில்லர் – வாண்டெட் டூசன் ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரின் பந்துவீச்சையும் பாரபட்சமே பார்க்காமல் இந்த ஜோடி பந்தாடியதன் மூலம் 19.1 ஓவரிலேயே இலக்கை மிக இலகுவாக எட்டிய தென் ஆப்ரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டேவிட் மில்லர் 31 பந்துகளில் 64 ரன்களுடனும், வாண்டர் டூசன் 46 பந்துகளில் 75 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்தநிலையில், இந்திய அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய தென் ஆப்ரிக்கா அணியின் வாண்டர் டூசன், ஐபிஎல் தொடரின் மூலம் கிடைத்த அனுபவமே தனது சிறப்பான பேட்டிங்கிற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து வாண்டர் டூசன் பேசுகையில், “ஐபிஎல் தொடரில் எனக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் கடந்த இரண்டு மாதமாக இங்கு இருந்தது எனது பேட்டிங்கை முன்னேற்றி கொள்வதற்கு உதவியாக இருந்தது. விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் அமர்ந்திருந்ததால், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பதை என்னால் கணிக்க முடிந்தது. 

எனக்கு மட்டுமல்லாமல் தென் ஆப்ரிக்கா அணியின் பல வீரர்களுக்கு இந்த வருட ஐபிஎல் தொடர் பெரும் உதவியாக இருந்துள்ளது. இதன் காரணமாகவே எங்களால் இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் இலகுவாக வெற்றி பெற முடிந்தது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை