மொஹாலியில் கெத்து காட்டிய ஜடேஜா!
இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை ருசித்து உள்ளது. மார்ச் 4ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் துவங்கிய இப்போட்டியில் 100 போட்டிகளில் விளையாடிய 12ஆவது இந்திய வீரராக சாதனை படைத்த நட்சத்திரம் விராட் கோலிக்கு சிறப்பு தொப்பியை பரிசளித்து பிசிசிஐ கௌரவப்படுத்தியது.
இதை அடுத்து துவங்கிய இப்போட்டியில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சை 574/8 என்ற மிகப் பெரிய ஸ்கோரை எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக இலங்கை பந்துவீச்சாளர்களை பந்தாடி கடைசி வரை அவுட்டாகாமல் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ரவீந்திர ஜடேஜா 175* ரன்களை குவித்தார். அவருடன் அதிரடியாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 97 ரன்களும் ரவிச்சந்திரன் அஷ்வின் 61 ரன்களும் எடுத்தனர்.
இதை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 174 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 178 ரன்களிலும் ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இந்த போட்டியில் பேட்டிங்கில் 175* ரன்களை விளாசிய ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் 2 இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 9 விக்கெட்டுகளை சாய்த்து ஒரு ஆல்-ரவுண்டராக செயல்பட்டு இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இதன் காரணமாக இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றார்.
இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் 150+ ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையையும் அவர் படைத்தார். மேலும் சர்வதேச போட்டிகளில் 5000+ ரன்கள் மற்றும் 400+ விக்கெட்டுகள் எடுத்த 2ஆவது வீரர் என்ற மகத்தான பெருமையை ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் பெற்றுள்ளார். இப்படி பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் அசத்தி வரும் ஜடேஜா இந்தியாவின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக தன்னை நிரூபித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் இந்த போட்டியையும் சேர்த்து மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் கடைசியாக நடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் அடுத்தடுத்து அபாரமாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா ஹாட்ரிக் ஆட்டநாயகன் விருதை வென்று மொகாலி கிரிக்கெட் மைதானத்தின் கில்லியாக மாறியுள்ளார். ஆம் இதற்கு முன் இந்த மைதானத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும், 2016ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகவும் ஆட்டநாயகன் விருதை ஜடேஜா வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.