சிபிஎல் 2022: மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது ஜமைக்கா தலாவாஸ்!

Updated: Sat, Oct 01 2022 10:32 IST
Jamaica Tallawahs are crowned CPL 2022 champions; thrash Barbados Royals by eight wickets in final (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் இன்றுடன் நிறைவு பெற்றது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பார்போடாஸ் ராயல்ஸ் அணியும், ஜமைக்கா தலாவஸ் அணிகள் மோதின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற பார்போடாஸ் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கார்ன்வெல் - கைல் மேயர்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். 

இதில் 36 ரன்கள் எடுத்திருந்த கார்ன்வெல் ஆட்டமிழக்க, அடுத்து கைல் மேயர்ஸும் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஆஸாம் கான் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பார்போடாஸ் ராயல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களைச் சேர்த்தார். ஜமைக்கா அணி தரப்பில் ஃபாபியன் ஆலன், நிக்கோலஸ் கார்டன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஜமைக்கா தலாவாஸ் அணியில் கென்னர் லூயிஸ் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த பிராண்டன் கிங் - ஷமரா ப்ரூக்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராண்டன் கிங் அரைசதம் கடந்து அசத்தினர். மறுமுனையொல் அரைசதம் அடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட ப்ரூக்ஸ் 47 ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிராண்டன் கிங் 88 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். 

இதன்மூலம் 16.1 ஓவர்களில் ஜமைக்கா தலாவாஸ் அணி இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் பார்போடாஸ் ராயல்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

முன்னதாக கடந்த 2013 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் ஜமைக்கா தலாவாஸ் அணி கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை