உனாத்கட்டிற்கு இனி இந்திய அணியில் வாய்ப்பில்லை - கர்சன் காவ்ரி!

Updated: Wed, May 26 2021 19:57 IST
Image Source: Google

இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட். இவர் இந்தியாவின் முதல்-தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் 2019-2020 சீசனில் சவுராஷ்டிரா அணியின் கேப்டனாக விளையாடி, 67 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அவரது சிறப்பான பந்து வீச்சால் சவுராஷ்டிரா அணி தொடரையும் வென்றது. 

சிறப்பான பந்து வீச்சினால் 29 வயதான ஜெய்தேவ் உனத்கட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியிலும் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சவுராஷ்டிரா ரஞ்சி கோப்பையை வென்றபோது அந்த அணிக்கு பயிற்சியாளராக இருந்த கர்சன் காவ்ரி, உனத்கட் இனிமேல் இந்திய அணியில் இடம் பிடிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கர்சன் காவ்ரி, “ரஞ்சி போட்டி இறுதி ஆட்டம் நடைபெறும் போது நான் இந்திய அணியின் தேர்வாளர் ஒருவரிடம், உனத்கட் 60 விக்கெட்டிற்கு மேல் வீழ்த்தியுள்ளார். தனிநபராக அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்துள்ளார். அவருக்கு இந்திய ‘ஏ’ அணியிலாவது இடம் கொடுக்கக் கூடாதா? என்று கேட்டேன்.

அதற்கு அந்த தேர்வாளர் என்னிடம், அவர் இந்திய அணிக்கு எப்போதும் தேர்வாக மாட்டார். நாங்கள் 30க்கும் மேற்பட்ட வீரர்களை கண்காணித்து வருகிறோம். அதில் அவர் பெயர் குறித்து ஆலோசனை கூட செய்யவில்லை என்றார்.

உனத்கட் இவ்வளவு விக்கெட் வீழ்த்துவதின் பயன் என்ன? என்று கேட்டதற்கு, அவருக்கு ஏற்கனவே 32-33 வயது ஆகிவிட்டது. அவரது வயது அவரது கிரிக்கெட் கேரியரை வீணாகிவிட்டது. இது அவரை இந்திய அணியில் இடம் பிடிப்பதை நிறுத்தி விடும் என்றார்’’ என தெரிவித்துள்ளார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான உனத்கட் 2010-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை