பிரையன் லாராவின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!

Updated: Sat, Jul 27 2024 19:55 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் 282 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரேய்க் பிராத்வைட் 61 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 59 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியானது 31 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஒல்லி போப், ஹாரி ப்ரூக் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் அரைசதம் கடந்து அசத்த, அவருக்கு துணையாக விளையாடிய கேப்டன் பென் ஸ்டோக்ஸும் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணியும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை நோக்கி விளையாடி வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சில சாதனைகளை பதிவுசெய்துள்ளார். அதன்படி, இப்போட்டியில் ஜோ ரூட் 87 ரன்களை சேர்த்ததன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 12ஆயிரம் ரன்களைக் கடந்து அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 12ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 

முன்னதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆலஸ்டர் குக் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 12,472 ரன்களை குவித்து முதலிடத்தில் தொடர்கிறார். மேற்கொண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய 7ஆவது வீரர் எனும் பெருமையையும் ஜோ ரூட் பெற்றுள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா 11,953 ரன்கள் எடுத்து 7ஆம் இடத்தில் இருந்தார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்நிலையில் அதனைத் தற்போது ஜோ ரூட் முறியடித்து 7ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். இங்கிலாந்து அணிக்காக இதுவரை 143 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், அதில் 32 சதங்கள் மற்றும் 62 அரைசதங்களை விளாசி12,027 ரன்களைக் குவித்துள்ளார். அதேசமயம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்களுடன் முதலிடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை