வெற்றிக்கு நானும் பங்களித்ததில் மகிழ்ச்சி - டேவிட் மாலன்!
வங்கதேச அணிக்கு எதிராக இன்று தர்மசாலா நகரில் நடைபெற்ற நடப்பு உலகக் கோப்பை தொடரின் ஏழாவது லீக் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி தொடக்க வீரரான டேவிட் மலானின் சிறப்பான ஆட்டம் காரணமாக ஆரம்பத்தில் இருந்தே அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 364 ரன்கள் குவித்து அசத்தியது.
பின்னர் 365 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய டேவிட் மலான் 107 பந்துகளை சந்தித்து 16 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 140 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய டேவிட் மாலன், “அணிக்காக எனது பங்களிப்பை வழங்கியது மகிழ்ச்சி. இந்த நிலைக்கு வர நான் பெரிய பயணத்தை மேற்கொண்டு உள்ளேன். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள வேளையில் இந்த வெற்றிக்கு நானும் பங்களித்ததில் மகிழ்ச்சி. இனிவரும் போட்டிகளிலும் என்னுடைய இந்த சிறப்பான பார்மை தொடர்வேன்.
சில சமயங்களில் நான் நல்ல ஷாட்டுகளை விளையாடுவேன். சில சமயங்களில் சற்று மோசமான ஷாட்டுகளை விளையாடுகிறேன். இது போன்ற நிகழ்வுகள் கிரிக்கெட்டில் சகஜம் தான். ஆனாலும் நமது அணிக்காக பங்களிப்பை வழங்குவது அவசியம். எங்களது அணியின் ஜோ ரூட் போன்ற தரமான வீரர் மூன்றாம் இடத்தில் களமிறங்கி விளையாடுவதால் என்னால் இன்னும் ஃபிரீயாக விளையாட முடிகிறது.
ஒருநாள் போட்டிகளில் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இருக்கிறது. மேலும் என்னை விமர்சிப்பவர்களுக்கு நான் என்னுடைய ஆட்டத்தின் மூலம் பதிலளிக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.