மீண்டும் காயமடைந்த ஆர்ச்சர்; சோகத்தில் ரசிகர்கள்!

Updated: Thu, May 19 2022 18:47 IST
Image Source: Google

கடந்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடிய ஜோப்ரா ஆா்ச்சா், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார். பிறகு ஐபிஎல் 2021 போட்டியிலிருந்தும் விலகினார். காயத்திலிருந்து மீண்டு வந்த ஆர்ச்சர், சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடினார். 

பிறகு, முழங்கை காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். கடந்த மே மாதம் முழங்கை காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகிய முக்கியமான போட்டிகளிலிருந்து அவர் விலகினார். 

டிசம்பர் 11 அன்று முழங்கை காயத்துக்கு மற்றொரு அறுவை சிகிச்சை மேற்கொண்டார் ஆர்ச்சர். இதையடுத்து இங்கிலாந்து அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்திலும் ஆர்ச்சர் இடம்பெறவில்லை. 

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி ஆர்ச்சரைத் தக்கவைக்கவில்லை. 2ஆவது அறுவை சிகிச்சை காரணமாக ஐபிஎல் 2022 போட்டியில் ஆர்ச்சர் பங்குபெறுவாரா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனாலும் ஐபிஎல் ஏலத்தில் ரூ. 8 கோடிக்கு ஆர்ச்சரைத் தேர்வு செய்தது மும்பை அணி. இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஆர்ச்சர் விளையாடாமல் போனாலும் அடுத்த வருடம் அவர் விளையாடவுள்ளார்.

மீண்டும் கிரிக்கெட் களத்துக்குத் திரும்புவது பற்றி இம்மாதத் தொடக்கத்தில் டெய்லி மெயில் ஊடகத்திடம் ஆர்ச்சர் தெரிவித்ததாவது: “பல அறுவை சிகிச்சைகள் நடைபெற்றதால் மீண்டும் விளையாட வருவேனா என்கிற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. எல்லா கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியுமா என்றும் சந்தேகப்பட்டேன். 

ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எனக்கு உறுதியையும் மனநிம்மதியையும் அளித்தது. நான் நீண்ட காலம் விளையாட வேண்டும் என்றார்கள்.  இங்கிலாந்து அணியுடனான ஒப்பந்தத்தை இழந்து விடுவேன் என எண்ணினேன். இப்போது எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் உள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது பற்றி இப்போது எதுவும் நான் யோசிக்கவில்லை. 

டி20 பிளாஸ்ட் போட்டியில் நான் விளையாட வேண்டும். அதில் நான் ஒழுங்காக விளையாடா விட்டால் என்னால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது. டி20 உலகக் கோப்பை வரப்போகிறது எனத் தெரியும். அதில் கலந்துகொண்டு நன்றாக விளையாட வேண்டும்” என்றார். 

இதையடுத்து மே 26 அன்று டி20 பிளாஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகளுக்கு மீண்டும் திரும்பும் ஆர்ச்சரின் திட்டத்தில் மற்றொரு தடங்கல் ஏற்பட்டுள்ளது. முதுகுப் பகுதியின் கீழ்ப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் இந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள போட்டிகளில் இருந்து ஆர்ச்சர் விலகியுள்ளார். இத்தகவலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி ஆர்ச்சர் எப்போது விளையாட வருவார் என்கிற கால அளவு நிர்ணயிக்கப்படவில்லை. மருத்துவர்களின் கருத்துகளைக் கேட்டுவிட்டு பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் தகவல் அளித்துள்ளது. இங்கிலாந்தில் ஜூன் 2 முதல் தொடங்கும் கிரிக்கெட் போட்டிகள், செப்டம்பர் 12 அன்று முடிவடைகிறது. நியூசிலாந்து, நெதர்லாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்கின்றன. 

கடந்த 14 மாதங்களில் மூன்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆர்ச்சருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டு செப்டம்பர் வரை மீண்டும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருப்பது இங்கிலாந்து ரசிகர்களை மிகவும் ஏமாற்றமடைய வைத்துள்ளது. 

சமீபகாலமாக ஆர்ச்சர், சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், ஒல்லி ராபின்சன், மார்க் வுட், ஸ்டோன், சகிப் முகமது, மேத்யூ ஃபிஷர் எனப் பல இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த வீரர்கள் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை