ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் - பியூஷ் சாவ்லாவின் சாதனையை முறியடித்த புவனேஷ்வர் குமார்!

Updated: Mon, Apr 28 2025 14:45 IST
Image Source: Google

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்காளூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

மேலும் இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறிய நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  12 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டியில் குர்னால் பாண்டியா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய புவனேஷ்வர் குமார் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். 

அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான இந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவிச்சாளர் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா 192 போட்டிகளில் விளையாடி 192 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தார். 

இந்நிலையில் தான் புவனேஷ்வர் குமார் 185 போட்டிகளில் விளையாடி 193 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலின் பெயரில் உள்ளது, அவர் 169 ஐபிஎல் போட்டிகளில் 214 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்

  • யுஸ்வேந்திர சாஹல் - 169 போட்டிகளில் 214 விக்கெட்டுகள்
  • புவனேஷ்வர் குமார் - 185 போட்டிகளில் 193 விக்கெட்டுகள்
  • பியூஷ் சாவ்லா - 192 போட்டிகளில் 192 விக்கெட்டுகள்
  • சுனில் நரைன் - 185 போட்டிகளில் 187 விக்கெட்டுகள்
  • ரவிச்சந்திரன் அஸ்வின் - 219 போட்டிகளில் 185 விக்கெட்டுகள்

இப்போட்டியைப் பற்றிப் பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 41 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆர்சிபி அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

Also Read: LIVE Cricket Score

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் குர்னால் பாண்டியா இணை அதிரடியாக விளையாடி அரைசதங்களை கடந்ததுடன் 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் விராட் கோலி 51 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை களத்தில் இருந்த குர்னால் பாண்டியா 73 ரன்களையும், டிம் டேவிட் 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை