ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய யுஸ்வேந்திர சஹால் - காணொளி!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கேவை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறினர். பின்னர் இணைந்த சாம் கரண் மற்றும் டெவால்ட் பிரீவிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 32 ரன்களில் டெவால்ட் பிரீவிஸ் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்திய சாம் கரணும் 88 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்ட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சஹால் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் மர்க்கோ ஜான்சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சஹால் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். அதன்படி இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை சஹால் வீசிய நிலையில் ஓவரின் 2ஆவது பந்தில் எம் எஸ் தோனி விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் தீபக் ஹூடா, அன்ஷூல் கம்போஜ் மற்றும் நூர் அஹ்மத் ஆகியோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் எனும் பெருமையை யுஸ்வேந்திர சஹால் பெற்றுள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 19ஆவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். இதுதவிர்த்து ஐபிஎல் தொடர் வரலாற்றில் யுஸ்வேந்திர சஹால் கைப்பற்றும் இரண்டாவது ஹாட்ரிக் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சஹால் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: ஷேக் ரஷீத், ஆயுஷ் மத்ரே, சாம் குர்ரான், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, தீபக் ஹூடா, எம்எஸ் தோனி(கேப்டன்), நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா
இம்பேக்ட் வீரர்கள் - அன்ஷுல் கம்போஜ், ரவிச்சந்திரன் அஷ்வின், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ண கோஷ், ஜேமி ஓவர்டன்
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்: பிரியான்ஷ் ஆர்யா, ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ், நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் ப்ரார், மார்கோ ஜான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், சூர்யன்ஷ் ஷெட்ஜ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்
Also Read: LIVE Cricket Score
இம்பேக்ட் வீரர்கள் -பிரப்சிம்ரன் சிங், முஷீர் கான், விஜய்குமார் வைஷாக், சேவியர் பார்ட்லெட், பிரவீன் துபே