ஐபிஎல் 2025: வதேரா, சஹால், ஜான்சென் அபாராம்; ஆர்சிபியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக தாமதமானது. பின்னர் மழை காரணமாக இப்போட்டியானது 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சால்ட் 4 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விராட் கோலியும் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ராஜத் படிதார் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் 4 ரன்களுக்கும், ஜித்தேஷ் சர்மா 2 ரன்களுக்கும், குர்னால் பாண்டியா ஒரு ரன்னிலும் என விகெட்டை இழக்க, ரஜத் படிதாரும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய இம்பேக் வீரர் மனோஜ் பன்டேஜ் ஒரு ரன்னிற்கு நடையைக் காட்ட ஆர்சிபி அணி 42 ரன்களிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
மேற்கொண்டு புவனேஷ்வர் குமார் மற்றும் யாஷ் தயாள் ஆகியோரும் ஹர்பிரீத் பிரார் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 26 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 48 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ஆர்சிபி அணி 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் அணி தரப்பில் மார்கோ ஜான்சென், யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்டோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக தொடங்கிய நிலையில், பிரப்ஷிம்ரன் சிங் 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான பிரியன்ஷ் ஆர்யாவும் 16 ரன்களுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்ட அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 7 ரன்களில் நடையைக் கட்டினார். மேற்கொண்டு அதே ஓவரில் ஜோஷ் இங்கிலிஸும் 14 ரன்களுடன் பெவிலியனுக்கு திரும்பினார்.
இதனால் பஞ்சாப் கிங்ஸ் 53 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய நேஹால் வதேரா மற்றும் ஷஷாங்க் சிங் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். ஒருகட்டத்திற்கு மேல் வதேரா அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடும் முயற்சியில் ஷஷாங்க் சிங் ஒரு ரன் மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தாலும், வதேரா தொடர்ந்து அதிரடியாக விளையாடி அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நெஹால் வதேரா 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 33 ரன்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் சிக்ஸர் விளாசியும் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 12.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.