அரையிறுதிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியை எச்சரித்த ஜோஸ் பட்லர்!

Updated: Wed, Jun 26 2024 22:47 IST
அரையிறுதிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியை எச்சரித்த ஜோஸ் பட்லர்! (Image Source: Google)

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இத்தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

கடந்த முறை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியானது அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிகுள் நுழைந்ததுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்தது. இதனால் கடந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.  இவ்விரு அணிகளிலும் அதிரடியான வீரர்களும், அபாரமான பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

இதனால் சமபலம் வாய்ந்த இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இதில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் இந்திய அணியின் அணுகுமுறை குறித்து சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள்  இம்முறை வித்தியாசமான இந்திய அணிக்கு எதிராக விளையாடப் போகிறோம் என்று நினைக்கிறேன். ஏனெனில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா பேட்டிங் செய்யும் விதம் மற்றும் அவர் அணியை வழிநடத்தும் விதம் ஆகியவை சிறப்பாக இருப்பதுடன், ஆக்ரோஷமான அணுகுமுறையுடனும் இந்திய அணி விளையாடி வருகிறது. 

ஏனெனில் கடந்த் 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணி பல மாற்றங்களை செய்துள்ளது. இது நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் எதிரொலித்தது. அதனால் இந்தியா அணி முழு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் ஆக்ரோஷமாக இருப்பார்கள், நாங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை