ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஜோஸ் பட்லர் - ரசிகர்கள் சோகம்
நடப்பாண்டு ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பயோ பபுள் பாதுகாப்புடன் இந்தியாவில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் வீரர்களுக்கு தொற்று பரவியதன் காரணமாக 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில், ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து எஞ்சியுள்ள 31 போட்டிகளையும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என பிசிசிஐ சில நாள்களுக்கு முன் அறிவித்தது. இதையடுத்து அதற்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரும் நெருங்குவதால், சில வெளிநாட்டு வீரர்கள் இத்தொடரில் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில் இங்கிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து அதிரடி வீரர் ஜோஸ் பட்லர், ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள பட்லர்; “அநேகமாக ஐபிஎல் தொடர் எந்தவொரு சர்வதேச போட்டிகளுக்கும் இடையூராக இருக்காது. ஒருவேளை அப்படி இருக்கும் பட்சத்தில், இங்கிலாந்து நிச்சயம் வீரர்களை விளையாட அனுமதிக்காது.
என்னால் முடிந்தவரை ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புகிறேன். ஆனால் இந்தாண்டு எஞ்சியுள்ள போட்டிகளில் என்னாள் விளையாட முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை. ஏனெனில் நாங்கள் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறோம். அதனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பது இயலாது” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்திருந்த நிலையில், ஜோஸ் பட்லரும் விளையாடமாட்டார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.