உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து அணியில் மீண்டூம் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்?

Updated: Sun, Aug 13 2023 15:16 IST
Image Source: Google

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற பின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ். இதனால் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லாமல் களமிறங்குவது பின்னடைவை ஏற்படுத்தும் என்று பார்க்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பையையும் பென் ஸ்டோக்ஸ் வென்று கொடுத்ததால், உலகக்கோப்பையில் மட்டும் அவர் களமிறங்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இருப்பினும் அண்மையில் முடிந்த ஆஷஸ் தொடரின் போது எழுந்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டோக்ஸ், ஓய்வில் இருந்து மீண்டும் வந்து உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் சுமார் 50 நாட்களே உள்ள நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று உலகக்கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து அணி தேர்வு செய்யப்படவுள்ளது. இதனால் இங்கிலாந்து அணி நிர்வாகம் தரப்பில் உலகக்கோப்பையை மீண்டும் வெல்வதற்கான பணிகளை தொடங்கப்பட்டுள்ளன. முதலில் ஓய்வில் இருந்து மீண்டும் பென் ஸ்டோக்ஸை அணிக்குள் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதனால் இங்கிலாந்து ஒருநாள் அணி கேப்டன் ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ்-யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் ஆஷஸ் தொடருக்காக மொயின் அலியை ஓய்வில் இருந்து வெளி வருமாறு பென் ஸ்டோக்ஸ் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று மொயின் அலி ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடி கொடுத்தார். தற்போது பென் ஸ்டோக்ஸ்-டம் அதேபோல் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதன் இறுதி முடிவு நாளை மறுநாள் தெரிய வரும்.

அதேபோல் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரை வெல்வதற்கு மிகமுக்கிய காரணமாக இருந்த மற்றொரு வீரரான ஆர்ச்சரை, மீண்டும் அணிக்குள் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனால் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து உலகக்கோப்பைக்கான திட்டத்தை தீட்டி வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை