மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுத்த ஹீதர் நைட்!

Updated: Thu, Aug 21 2025 20:25 IST
Image Source: Google

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை: எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக நாட் ஸ்கைவர் பிரண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது. முன்னதாக இத்த்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்காகது, இந்திய-பாகிஸ்தான் எல்லை பதற்றம் உள்ளிட்ட காரணங்களினால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட மறுப்பு தெரிவித்தது.

மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போதே இனி இந்தியாவில் பாகிஸ்தான் அணி விளையாடாது என்ற அறிவிப்பையும் பிசிபி வெளியிட்டிருந்தது.  இதன் காரணமாக பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் பொதுவான இடத்தில் நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்சமயம் ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான மைதானங்களை சமீபத்தில் அறிவித்தது. இதில் பாகிஸ்தான் மகளிர் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றனர். முன்னதாக ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்நிலையில் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக நாட் ஸ்கைவர் பிரண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேசமயம் காயத்தில் இருந்து மீண்டுள்ள முன்னாள் கேப்டன் ஹீதர் நைட், டேனியல் வையட், சாரா கிளென் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளும் மீண்டும் அணியில் சேர்ந்துள்ளனர். மேலும் நட்சத்திர வீராங்கனைகள் டாமி பியூமண்ட், சோஃபியா டங்க்லி, ஏமி ஜோன்ஸ், சார்லீ டீன், சோஃபி எக்லெஸ்டோன், லாரன் பெல் உள்ளிட்டோருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி அக்டோபர் 3ஆம் தேதி தங்களின் முதல் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

Also Read: LIVE Cricket Score

இங்கிலாந்து மகளிர் அணி: நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கேப்டன்), எமிலி ஆர்லாட், டாமி பியூமண்ட், லாரன் பெல், ஆலிஸ் கேப்ஸி, சார்லி டீன், சோஃபியா டங்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், லாரன் ஃபைலர், சாரா க்ளென், ஏமி ஜோன்ஸ், ஹீதர் நைட், எம்மா லாம்ப், லின்சி ஸ்மித், டேனி வயட்-ஹாட்ஜ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை