ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகி சாதனைப்படைத்தார் ஜோஷுவா லிட்டில்!

Updated: Sat, Dec 24 2022 13:13 IST
Josh Little Becomes First Ireland Cricketer To Earn Indian Premier League Deal (Image Source: Google)

ஐபில் தொடரின் 16ஆவது சீசனுக்கான விரர்கள் மினி ஏலமானது கொச்சியில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்று வருகிறது. இந்த மினி ஏலத்திற்கான இறுதிக் கட்ட வீரர்கள் பட்டியலில் 405 பேர் உள்ளனர். அதில் 273 இந்திய வீரர்களும், 132 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். இவர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டவர் உள்பட சுமார் 80 வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த ஏலத்தில் சாம் கரண், கேமரூன் கிரீன், பென் ஸ்டோக்ஸ், நிக்கோலஸ் பூரண், ஹாரி ப்ரூக் ஆகியோர் சிறந்த ஃபார்மில் இருப்பதால், அனைத்து அணிகளும் போட்டியிட்டு பெரும் தொகைக்கு வாங்கின. இந்திய வீரர்களில் மயங்க் அகர்வால், ஷிவம் மாவி மற்றும் முகேஷ் குமார் உள்ளிட்ட வீரர்களும் நல்ல தொகைக்கு வாங்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே அயர்லாந்து அணியைச் சேர்ந்த இளம் வீரர் ஜோஷுவா லிட்டில் ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு வாங்கப்படுவார் என்று சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கணித்திருந்தனர். இவர் ஏற்கனவே சென்னை அணியின் நெட் பந்துவீச்சாளராக இருந்ததால், சென்னை அணியிலும் வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, கேப்டன் ஹர்திக் பாண்டியா பல்வேறு வீரர்களுக்கு பேட்டினை பரிசாக கொடுத்து ஐபிஎல் ஒப்பந்தம் கிடைக்க வாழ்த்து தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி லிட்டில் அசத்தினார். 

அதற்கு ஏற்ப ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியே ஜோஷுவா லிட்டிலை ரூ. 4.40 கோடிக்கு வாங்கியுள்ளது. எப்போதுமே தனித்துவமான திறமையை கொண்ட இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான லிட்டிலை ஏலத்தில் வாங்க லக்னோ அணியும் முயற்சித்தது. இருப்பினும் குஜராத் அணி அதிக தொகை கொடுத்து வாங்கியுள்ளது. அயர்லாந்து அணியை சேர்ந்த வீரர் ஒருவர் முதல்முறையாக ஐபிஎல் ஒப்பந்தத்தை பெற்றுள்ளார். முன்னதாக ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராஸாவை பஞ்சாப் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை