ராவல்பிண்டி பிட்ச் சராசரிக்கு கீழ் என ரிப்போர்ட் கொடுத்த போட்டி நடுவர்!

Updated: Fri, Mar 11 2022 11:34 IST
Karachi May Revive Pakistan-Australia Series After 'Benign' First Test (Image Source: Google)

பாகிஸ்தான்  - ஆஸ்திரேலியா இடையே ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 5 நாட்கள் ஆட்டத்தில் மொத்தமாகவே 14 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தது. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 476 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 459 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸே கடைசி நாள் ஆட்டத்தின் முதல் செசனில் தான் முடிந்தது. அதன்பின்னர் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக் மற்றும் அப்துல்லா ஷாஃபிக் ஆகிய இருவருமே 77 ஓவர்கள் பேட்டிங் ஆடி முடித்தனர். இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது.

முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 162 ஓவர்களும், ஆஸ்திரேலிய அணி 140 ஓவர்கள் பேட்டிங் ஆடின. 2ஆவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 77 ஓவர்கள் பேட்டிங் ஆடியது. இந்த போட்டியில் மொத்தமாக வீசப்பட்ட 379 ஓவர்களில் வெறும் 14 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தன. ஆஸ்திரேலிய அணி வெறும் 4 விக்கெட் மட்டுமே வீழ்த்தியது.

ராவல்பிண்டி ஆடுகளம் வேகப்பந்துவீச்சு மற்றும் சுழற்பந்துவீச்சு பவுலிங் ஆகிய இரண்டுவிதமான பவுலிங்கிற்கும் ஒத்துழைக்கவில்லை. அண்மைக்காலத்தில் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவது மிகவும் வியப்பான விஷயமாக இருந்துவரும் நிலையில், ராவல்பிண்டி டெஸ்ட் போட்டி எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் முடிந்தது. இதையடுத்து ராவல்பிண்டி ஆடுகளம் கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஆஸி., வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ராவல்பிண்டி ஆடுகளத்தை விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில், ராவல்பிண்டி ஆடுகளம் ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங் ஆகிய இரண்டு விதமான பவுலிங்கிற்கும் ஒத்துழைக்கவில்லை. பிட்ச்சில் பவுன்ஸே இல்லை. ஐசிசி வழிகாட்டுதலின்படி, அந்த ராவல்பிண்டி பிட்ச் சராசரிக்கும் கீழான பிட்ச் என்று போட்டி நடுவர் ரஞ்சன் மடுகல்லே ரிப்போர்ட் கொடுத்துள்ளார். அதனால் ஒரு டீமெரிட் புள்ளியும் ராவல்பிண்டி பிட்ச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஐசிசி வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு பிட்ச்சும் மிகச்சிறப்பு, சிறப்பு, சராசரி, சராசரிக்கு கீழ், மோசம், படுமோசம் என மதிப்பிடப்படும். இதில் சராசரிக்கு கீழான பிட்ச் என்று ரிப்போர்ட் செய்யப்பட்டால் ஒரு டீமெரிட் புள்ளியும், பிட்ச் மோசம் என்றால் 3 டீமெரிட் புள்ளியும், படுமோசமான பிட்ச் என்றால் 5 டீமெரிட் புள்ளியும் வழங்கப்படும். 5 டீமெரிட் புள்ளி பெறும் மைதானத்தில் ஓராண்டுக்கு சர்வதேச போட்டிகள் நடத்த தடை விதிக்கப்படும். 10 டீமெரிட் புள்ளிகளை பெறும் மைதானத்தில் 2 ஆண்டுகள் சர்வதேச போட்டிகள் நடத்த தடை விதிக்கப்படும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை