கவுண்டி சாம்பியன்ஷிப் 2023: சதமடித்து மிரட்டிய கருண் நாயர்; வைரலாகும் காணொளி!
இந்திய கிரிக்கெட்டில் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக்கிற்கு பின் முச்சதம் விளாசிய ஒரே வீரர் கருண் நாயர் தான். சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியில் கருண் நாயர்ன் ஆட்டம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 381 பந்துகளில் 32 பவுண்டரி, 4 சிக்சர் உட்பட 303 ரன்களை விளாசி சாதனை படைத்தார்.
அதன்பின்னர் இந்திய அணியில் நிரந்தர வீரராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபார்மின்றி இந்திய அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்திய அணிக்காக வெறும் 6 டெஸ்ட் போட்டிகள், 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியவர், அதன்பின்னர் இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுக்கவே இல்லை.
அதேபோல் ஐபிஎல் தொடர்களிலும் கருண் நாயர் சோபிக்க தவற, அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாகவே பார்க்கப்பட்டது. ஆனால் கருண் நாயர் தொடர்ச்சியாக ஃபார்முக்கு வர முயன்று வந்தார். அந்த வகையில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாட கருண் நாயகருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இதையடுத்து நார்த்தாம்டன்ஷையர் அணிக்காக விளையாட கருண் நாயர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் கவுண்டி சமபியன்ஷிப் தொடரில் சர்ரே அணிக்கு எதிரான போட்டியில் நார்த்தாம்டன்ஷையர் அணி களமிறங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சர்ரே அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நார்த்தாம்டன்ஷையர் அணியில் ஹசன் அசாத்,எமிலோ கே, லுக் ப்ரோக்டர், ராப் கியோக், சைப் ஸைப், லூயிஸ் மேக்னஸ், ஜஸ்டின் பிராட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் இணைந்த கருண் நாயர் -டாம் டைலர் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் 66 ரன்கள் எடுத்த நிலையில் டாம் டைலர் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் சதமடித்து அசத்தினார். இந்நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் தடைப்பட்டுள்ளது.
இதில் ஆட்டமிழக்காமல் இருக்கும் கருண் நாயர் 229 பந்துகளில் 22 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 127 ரன்களை விளாசி களத்தில் இருக்கிறார் . இதன் காரணமாக நார்த்தாம்டன்ஷையர் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 333 ரன்கள் சேர்த்துள்ளது. நீண்ட காலத்திற்கு பின் கருண் நாயர் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் நிலையில், அடுத்தடுத்து உள்ளூர் தொடர்களில் அசத்தும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.