இந்த போட்டி குறித்து எதையும் கூற முடியாது - ரிஷப் பந்த்!

Updated: Thu, Oct 14 2021 11:53 IST
Image Source: Google

ஷார்ஜா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு நுழையும் என்பதனால் இரு அணிகளுமே மிக சிறப்பான போராட்டத்தை இந்த போட்டியில் தந்தது. 

முதலில் விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. பின்னர் 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியும் அதற்கேற்றார்போல் சிறப்பான தொடக்கத்தை பெற்றது. 

12.2 ஓவர்களில் 96 ரன்களுக்கு தங்களது முதல் விக்கெட்டை இழந்தது. சிறப்பாக விளையாடிய வெங்கடேச ஐயர் 41 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் 46 ரன்கள் எடுத்து கில் ஆட்டமிழந்து வெளியேற மிடில் ஆர்டரில் சற்று தொய்வு ஏற்பட்டது.

தினேஷ் கார்த்திக், மோர்கன், ஷாகிப் அல் ஹசன், சுனில் நரைன் ஆகிய நால்வரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேற போட்டியின் இறுதி ஓவரில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. முக்கியமான அந்த கடைசி ஓவரில் 6 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்தில் த்ரிப்பாதி சிங்கிள் எடுக்க அடுத்த இரண்டு பந்துகளில் ஒரு டாட் பால் மற்றும் விக்கெட் விழுந்தது. 4-வது பந்தியிலும் விக்கெட் விழ கடைசி இரு பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது 5-வது பந்தை எதிர்கொண்ட த்ரிப்பாதி சிக்சர் அடித்து கொல்கத்தா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதி இரண்டு பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் டெல்லி அணியை வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் த்ரிப்பாதி அடித்த சிக்ஸர் காரணமாக டெல்லி அணி தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பின்னர் பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த், “தற்போது நாங்கள் இருக்கும் நிலைமையை கூற வார்த்தைகள் இல்லை. இந்த போட்டி குறித்து எதையும் கூற முடியாது. நாங்கள் கடைசி வரை இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வைத்து இருந்தோம். முடிந்த அளவு போட்டியை எவ்வளவு தூரம் கொண்டு செல்ல வேண்டுமோ ? அவ்வளவு தூரம் கொண்டு செல்ல நினைத்தோம்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அதன்படி எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். இருப்பினும் இறுதியில் போட்டி எங்கள் கையை விட்டுச் சென்றது. கொல்கத்தா அணியின் வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். எங்களது அணி இந்த தொடரில் நல்ல எண்ணங்களையும், நம்பிக்கையையும் எடுத்துச்செல்கிறது. இந்த தொடர் முழுவதுமே நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி உள்ளோம். நிச்சயம் அடுத்த ஆண்டு இதை விட பலமாக திரும்புவோம்” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை