பேட்டிங்கில் நாங்கள் சறுக்கியதாக நினைக்கிறேன் - நிதீஷ் ராணா!
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39ஆஆவது லீக் போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மதியம் நடைபெற்றது. இந்த போட்டிகள் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது. கொல்கத்தாணி சார்பாக துவக்க வீரர் ரஹமனுல்லா குர்பாஸ் 81 ரன்களை குவித்து அசத்தினார். பிறகு 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 17.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.
இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய கேகேஆர் அணியின் கேப்டன் நிதீஷ் ராணா, “நாங்கள் இந்த போட்டியில் 20 முதல் 25 ரன்கள் வரை குறைவாக குவித்து விட்டோம். அதுவும் குஜராத் போன்ற மிக பலம் வாய்ந்த அணிக்கு எதிராக ரன்கள் மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் பேட்டிங்கில் நாங்கள் சறுக்கியதாக நினைக்கிறேன். இந்த போட்டியில் பாட்னர்ஷிப் எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.
குர்பாஸ் மற்றும் ரசல் ஆகியோரை தவிர்த்து என்னையும் சேர்த்து மிடில் ஆர்டரில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. அதுதான் நாங்கள் இந்த போட்டியில் செய்த தவறு என்று நினைக்கிறேன். மிடில் ஓவர்களில் நல்ல பார்ட்னர்ஷிப் கிடைத்திருந்தால் இன்னும் நிறைய ரன்கள் கிடைத்திருக்கும் இது போன்ற சில தவறுகளை நாங்கள் இந்த போட்டியில் செய்து விட்டோம். இனிவரும் போட்டிகளில் இந்த தவறுகளை திருத்திக் கொண்டு நல்ல நிலையில் திரும்புவோம்” என்று கூறியுள்ளார்.