ஐபிஎல் 2022: வெங்கடேஷ் ஐயருக்கு அடித்த ஜேக்பாட்!
ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க நேற்று கடைசி நாள் என்பதால் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டன.
அந்த வகையில் கொல்கத்தா அணி தங்களது அணியில் தக்க வைக்கும் 4 வீரர்களை அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதன்படி ஆண்ட்ரே ரஸ்ஸல் 12 கோடிக்கும், வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் 8 கோடிக்கும், சுனில் நரைன் 6 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டனர்.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விசயம் யாதெனில் கடந்த ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் கொல்கத்தா அணிக்காக அறிமுகமாகிய வெங்கடேஷ் ஐயர் இதுவரை 10 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்த 10 போட்டிகளிலேயே தனது சிறப்பான ஆட்டத்தை பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் வெளிப்படுத்தினார்.
இதன் காரணமாக அவருக்கு இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பும் கிடைத்தது. அண்மையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றிருந்த அவர் மூன்று போட்டிகளிலும் விளையாடி இருந்தார். இதன் காரணமாக அவருக்கு இந்த ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய அதிஷ்டம் கிடைத்து உள்ளது.
ஏனெனில் இந்திய அணிக்காக விளையாடாமல் இருக்கும் ஒரு வீரரை அணியில் தக்கவைக்கும் போது அவருக்கு அதிகபட்சம் 4 கோடி வரை மட்டுமே கிடைத்திருக்கும். ஆனால் அவர் அண்மையில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்ததால் அவர் தற்போது 8 கோடிக்கு கொல்கத்தா அணியால் தக்க வைக்கப்பட்டுள்ளார்.
அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் இந்திய வீரர்களாகவும், ஆல்ரவுண்டர் ரஸ்ஸல் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் கொல்கத்தா அணியால் தக்கவைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.