PAK vs AUS: ஆடுகள விவகாரத்தில் பிசிபியை விளாசிய வாசிம் அக்ரம்!

Updated: Mon, Mar 14 2022 15:15 IST
Knew it was draw after two deliveries in the match: Wasim Akram slams PCB (Image Source: Google)

பாகிஸ்தான்  - ஆஸ்திரேலியா இடையே ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 5 நாட்கள் ஆட்டத்தில் மொத்தமாகவே 14 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தது. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 476 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 459 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸே கடைசி நாள் ஆட்டத்தின் முதல் செசனில் தான் முடிந்தது. அதன்பின்னர் 2வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக் மற்றும் அப்துல்லா ஷாஃபிக் ஆகிய இருவருமே 77 ஓவர்கள் பேட்டிங் ஆடி முடித்தனர். இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது.

முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 162 ஓவர்களும், ஆஸ்திரேலிய அணி 140 ஓவர்கள் பேட்டிங் ஆடின. 2வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 77 ஓவர்கள் பேட்டிங் ஆடியது. இந்த போட்டியில் மொத்தமாக வீசப்பட்ட 379 ஓவர்களில் வெறும் 14 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தன. ஆஸ்திரேலிய அணி வெறும் 4 விக்கெட் மட்டுமே வீழ்த்தியது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் வந்ததிலிருந்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகள் முடிவுகளை எட்டுகின்றன. அரிதினும் அரிதாகத்தான் டெஸ்ட் போட்டி டிரா ஆகிறது. அப்படியே டிராவானாலும் கடுமையாக போராடி டிரா செய்யும் நிலைமைதான் உள்ளது. 

அப்படியிருக்கையில், பாகிஸ்தான்  - ஆஸ்திரேலியா இடையேயான ராவல்பிண்டி டெஸ்ட் அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதற்கு பிட்ச்சில் எதுவுமே இல்லாததுதான் காரணம். போட்டி கொஞ்சம் கூட சுவாரஸ்யம் இல்லாமல் படுமோசமாக இருந்தது. முதல் டெஸ்ட் நடந்த ராவல்பிண்டி பிட்ச் சராசரிக்கு கீழானது என்று போட்டி நடுவர் ரஞ்சன் மடுகல்லே ரிப்போர்ட் செய்ததையடுத்து, ஒரு டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டது.

ராவல்பிண்டி பிட்ச்சை தயார் செய்த விதத்தை இன்சமாம் உல் ஹக், ஷாஹித் அஃப்ரிடி உள்ளிட்ட பல முன்னாள் ஜாம்பவான்கள் விமர்சித்திருந்தனர். 

ராவல்பிண்டி ஆடுகளம் மட்டுமல்ல; 2ஆவது டெஸ்ட் போட்டி நடந்துவரும் கராச்சி ஆடுகளமும் படுமட்டமாக உள்ளது. முதல் 2 நாட்களும் முழுமையாக பேட்டிங் ஆடியது ஆஸ்திரேலிய அணி. முதல் இன்னிங்ஸில் 556 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிட்ச்சை தயார் செய்த விதத்தை வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார்.  இதுகுறித்து பேசிய வாசிம் அக்ரம், “நாங்கள் ஆடிய காலத்தில் கேப்டன்கள் விருப்பத்தின்படி தான் பிட்ச் தயார் செய்யப்படும். நானும் இந்த 2 டெஸ்ட் போட்டிகளை எப்படியாவது பார்த்துவிடுவோம் என்றுதான் முயற்சி செய்தேன். 

ஆனால் என்னால் முடியவில்லை. இந்த போட்டியில் வீசப்பட்ட 2ஆவது பந்தை பார்த்தபோதே, இந்த போட்டி டிராவில் தான் முடியும் என்று ஒரு முன்னாள் ஃபாஸ்ட் பவுலராக எனக்கு தெரிந்துவிட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி கம்பேக் கொடுக்கும்போது, இம்ரான் கான் கேப்டனாக இருந்தபோது, இதுமாதிரியான ஸ்லோ பிட்ச்களை தயார் செய்வோம். 

ஆனால் ஸ்லோ பிட்ச்களை தயார் செய்வதில் சில முறைகள் உள்ளன. ஸ்லோ பிட்ச்களை தயார் செய்ய வேண்டுமென்றால், பிட்ச்சின் மத்தியில் ரோல் செய்து, ஃப்ரண்ட் ஃபூட் ஏரியாவை டிரையாக விட வேண்டும். அப்போதுதான் பந்து திரும்பவாவது செய்யும். 

ஸ்லோ பிட்ச் தயார் செய்யும்போது பந்து திரும்பவாவது செய்தால்தான் போட்டியும் முடிவு கிட்டும். எனவே பிட்ச்சை தயார் செய்பவர்கள் அதை கற்றுக்கொள்ள வேண்டும். உண்மையாகவே டெஸ்ட் போட்டி சலிப்பை ஏற்படுத்தியது” என்று விமர்சித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை