IND vs AUS: ராகுல் டிராவிட்டினை முந்தும் விராட் கோலி!
சமகால கிரிக்கெட் தொடரின் அசைக்க முடியாத ஜாம்பவானாக வலம் வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தன்னுடைய முதல் சர்வதேச டி20 சதத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும் 2019 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கடைசியாக சதம் அடித்த விராட் கோலி அதற்குப்பின் இரண்டு வருடங்கள் எந்த ஒரு சதமுமே அடிக்கவில்லை. இவர் சதம் அடித்து 1000 நாளை கடந்து விட்டதால் விராட் கோலி குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்து வந்தது.
ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத விராட் கோலி ஆசிய கோப்பை சிறந்த கம்பேக் கொடுத்திருந்தார். பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் போன்ற அணிக்கு எதிராக இரண்டு அரைசதம் அடித்திருந்த விராட் கோலி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னுடைய முதல் சர்வதேச டி20 சதத்தை பதிவு செய்துள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கம்பேக் கொடுத்த விராட் கோலியை அந்த போட்டியின் மூலம் எட்டு விதமான சாதனைகளை படைத்து உலகின் பல்வேறு திசைகளிலிருக்கும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நாளை நடக்கவிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலி மிகப்பெரிய சாதனை ஒன்றை படைக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டி20 தொடரில் 349 போட்டிகளில் 6 சதங்கள் மற்றும் 80 அரை சதங்கள் உட்பட 10,902 ரன்கள் அடித்திருக்கும் விராட் கோலி நிச்சயம் எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் 11000 கடந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளில் 71 சதங்கள் 124 அரை சதங்கள் அடித்திருக்கும் விராட் கோலி, மொத்தம் 24,002 ரன்கள் அடித்திருக்கிறார். இன்னும் விராட் கோலி 62 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் இந்திய அணியின் முன்னாள் ஜம்பவானான ராகுல் டிராவிட்டின் சாதனையான 24,064 ரன்களைக் கடக்கவுள்ளார்.
இதுவரை, சச்சின்(34,357), ராகுல் டிராவிட் (24,064), விராட் கோலி (24,002) என 3 இந்திய வீரர்கள் 24 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.