NED vs WI, 3rd ODI: ப்ரூக்ஸ், மெயர்ஸ் அசத்தல் சதம்; நெதர்லாந்துக்கு 309 டார்கெட்!
நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி ஆம்ஸ்டெல்வீனில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஷாய் ஹோப் 24 ரன்கள் எடுத்த நிலையில் லீடே பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கைல் மேயர்ஸ் - சமாரா ப்ரூக்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிவந்த இருவரும் அரைசதம் கடந்து, சதத்தை நோக்கி நெருங்கி கொண்டிருந்தனர்.
இதில் கைல் மேயர்ஸ் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய கைல் மேயர்ஸ் 120 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 7 ரன்களோடும், கடைசி இரண்டு போட்டிகளிலும் அசத்திய பிராண்டன் கிங்கும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அனாலும் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த சமாரா ப்ரூக்ஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 120 ரன்களையும், சமாரா ப்ரூக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 101 ரன்களையும் சேர்த்தனர்.