அதிர்ச்சி தோல்வியால் அணிக்குள் ஏற்பட்ட ரணகளம்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி தீபக் சஹாரின் அபாரமான ஆட்டத்தினால் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், நேற்றைய போட்டியின் கடைசி சில ஓவர்களில் இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர், கோபத்தின் உச்சிக்கே சென்று சில வார்த்தைகளை உதிர்த்துள்ளார். இது நேரலை வாயிலாக ரசிகர்கள் பலரும் கண்டனர்.
மேலும் போட்டி முடிவுக்கு பின்னர் மிக்கி ஆர்த்தர் மற்றும் கேப்டன் தசுன் ஷானகா இருவரும் மைதானத்திலேயே கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் வெளியாகின.
இதனை கவனித்த இலங்கை முன்னாள் வீரர் ரஸ்ஸல் அர்னால்ட்,“பயிற்சியாளருக்கும் கேப்டனுக்கும் இடையிலான இந்த உரையாடல் களத்தில் நடந்திருக்கக்கூடாது, அது டிரெஸ்சிங் ரூமில் நடந்திருக்க வேண்டும்” என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளைப்பினார்.
இதனை கவனித்த மிக்கி ஆர்தர் தனது விளக்கத்தை ட்விட்டரில் தெரிவித்தார். அவரது பதிவில்,“ரஸ்ஸல், நாங்கள் வெற்றி தோல்வி ஆகியவற்றில் ஒன்றாகதான் இருக்கிறோம். அதனால் நாங்கள் எப்போதுமே கற்றுக்கொண்டு தான் இருக்கிறோம்.
அதிலும் நேற்றைய தோல்வியால் நாங்கள் இருவரும் விரக்தியில் இருந்தோம். அது உண்மையில் ஒரு நல்ல விவாதமாக தான் இருந்தது. அதனால், இதனை பெரிதாக்க வேண்டிய அவசியமில்லை” என்று பதிலளித்துள்ளார்.