எல்பிஎல் 2021: வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்; நவம்பர் மாதத்திற்கு தொடர் ஒத்திவைப்பு!
ஐபிஎல் தொடர்களைப் போலாவே பல நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் டி20 லீக் போட்டிகளை நடத்தி வருகின்றன. அதன்படி கடந்தாண்டு இலங்கை கிரிக்கெட் வாரியமும் லங்கா பிரீமியர் லீக் என்ற டி20 தொடரை அறிமுகம் செய்தது.
அதன் படி இலங்கையில் கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் முதல் சீசன் கடந்தாண்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இந்நிலையில், இத்தொடரின் இரண்டாவது சீசன் வரும் ஜூலை 29ஆம் தேதி முதல் நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.
ஆனால் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் காரணமாக இத்தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்குபெறுவது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
இதன் காரணமாக எல்பிஎல் தொடரின் இரண்டாவது சீசனை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில்,“வெளிநாட்டு வீரர்கள் இத்தொடரில் பங்கேற்க முடியாத சூழலினால் லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது சீசன் நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது டிசம்பர் 12ஆம் தேதி நடத்தப்படுகிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.