பாகிஸ்தான் தொடரிலிருந்து லியாம் லிவிங்ஸ்டோன் விலகல்; காரணம் இதுதான்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 17 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அதற்கேற்றது போல் கடந்த 1ஆம் தேதி ராவல்பிண்டியில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 657 ரன்களையும், பாகிஸ்தான் அணி 579 ரன்களையும் எடுத்தனர்.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 264 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. இதனால் 343 ரன்கள் இலக்கை துரத்தி பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
இந்நிலையில் இத்தொடரின் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுகமான நட்சத்திர வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் காயம் கராணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் பீல்டிங் செய்துகிண்டிருக்கும் போது லிவிங்ஸ்டோனுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக இங்கிலாந்துக்கு திரும்பவுள்ளார்.
இதையடுத்து லிவிங்ஸ்டோனுக்கு மாற்று வீரராக மற்றொரு அறிமுகம வீரர் 18 வயதே ஆன சுழற்பந்துவீச்சாளர் ரெஹான் அகமது அடுத்த போட்டியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் அடுத்த போட்டியில் அறிமுகமாகும் பட்சத்தில் இங்கிலாந்து அணிக்காக குறைந்த வயதில் டெஸ்ட் அணியில் விளையாடிய வீரர் எனும் பெருமையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.