எல் எல் சி 2022: இந்திய மஹாராஜாஸை வீழ்த்தியது உலக ஜெயண்ட்ஸ்!
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற வீரர்கள் கலந்துகொண்டு ஆடும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் ஓமனில் நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா மஹாராஜாஸ் மற்றும் உலக ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற இந்தியா மஹாராஜாஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, உலக ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர் கெவின் பீட்டர்சன் 5 பந்தில் 11 ரன் அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான மஸ்டர்ட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அவரும் 57 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 3ஆம் வரிசையில் இறங்கி அடித்து ஆடினார் ஹெர்ஷல் கிப்ஸ்.
இன்றைய கிப்ஸின் பேட்டிங், விண்டேஜ் கிப்ஸின் பேட்டிங்கை கண்முன் நிறுத்தியது. அதிரடியாக விளையாடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ஹெர்ஷல் கிப்ஸ், 46 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 89 ரன்களை குவித்த நிலையில், 11 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். கெவின் ஓ பிரையன்14 பந்தில் 5 சிக்ஸர்களுடன் 34 ரன்களை விளாசி ஆட்டமிழக்க, 20 ஓவரில் 228 ரன்களை குவித்தது.
இதையடுத்து இமாலய இலக்கை துரத்திய களமிறங்கிய இந்திய மஹாராஜாஸ் அணியில் நமன் ஓஜா அதிரடியாக விளையாடி மளமளவென ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 95 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சைட்பாட்டமின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய யூசுப் பதான் 45, இர்ஃபான் பதான் 56 என அதிரடியில் மிரட்டினர்.
ஆனாலும் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மஹாராஜாஸ் அணியால் 223 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் உலக ஜெயண்ட்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் உலக ஜெயண்ட்ஸ் அணி, ஆசிய லையன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.